வியாழன், 15 மே, 2014

பாவ மன்னிப்பு.




இப்போது பார்க்க இயலா
வேலிகளை தாண்டிய
வெளியில் நின்றாலும்
திரும்பும் போது விழிகளில்
தென்படுவது என்னமோ
உனது புன்னகை உதிர்ந்த பூமியும்
நாம் கைகோர்த்து நடந்த
காலடித் தடங்களும்தான்

எப்படித்தான்
கூட்டிப் பெருக்கினாலும்
உதிர்ந்து விழுகின்றன
உன் நினைவுகள்
என் முற்றமெங்கும்.....

அது நாம் அடைந்த
முதல் மகிழ்வும்,ஆதித்துயரும்
அடங்கியதால்
பழுத்து விழும் நிலையிலும்
இலையென
விட்டுவிட முடிவதில்லை.

அன்று
இருகைகளாலும்
கோரிக்கைகளை
முன்வைத்த என்னால்
பலனை ஒரு கையாலேனும்
பற்ற முடியவில்லை

எந்த ஜெபித்தலாலும்
பரிசுத்தம் அடையமுடியா
பாவம் நிறைந்த வழிகளிலேயே
பயணித்திருக்கிறேன்
இன்று
வெளிபடுத்த தெரியாமல்
வெட்கப் படவேண்டியதாய் இருக்கிறது

நீதி மறுக்கப்பட்ட நிலைக்குப்பின்
நீ குப்பையாய் கிடந்தாலும்
சுத்தமாய் இருக்கிறாய்
நானோ பெயரளவில்
சுத்தமாய் இருந்தாலும்
குப்பையாய் கிடக்கிறேன் உள்ளே மனசால்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.