புதன், 22 ஏப்ரல், 2015

உடையும் கடல்!





அழகான முற்றத்தில்
குரோட்டன் செடியுடன் வளர்ந்து
சமீபமாக இருந்த சந்தோசம்தான்
பாறைகள் முளைத்திருக்கும்
நேற்றைய காலத்தின் தெருவழியே..
பருவங்கள் என்ற பதங்களுடன்
கடந்து போனது என்னை.

அவர்கள் குருடாய் இருந்ததால்
அது போகட்டும் என்று விட்டு விட்டேன்

இன்று நானாக திரும்புகிறேன்
மயானம் இருக்கும்
இப்போதைய சாலைக்கு.
ஆமணக்கும்,சப்பாத்து கள்ளியும்
செறிந்த திடலில்.....,
நானும் ஒண்ட வேண்டியாயிற்று.

சுவர்க்கம்,நரகம் கேள்வி ,கணக்கு
எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்
மரணிப்பதற்கு மட்டும்
இங்கு மனிதர்கள் தயாரில்லை.


மயானத்திற்கு செல்ல
விருப்பமற்றவர்களின்
பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படுகின்ற
பின்னிரவொன்றில்...........,

வானவெளி எங்கும்
என் எதிர்பார்ப்பை கூட்டி,கழித்து
பெருக்குகின்றன கரும் முகில்கள்
மண்பற்றி,வேர்நிறுவி,கிளைவிட்டு
நிழல் விரித்து 
இலை தரித்து,பூ ஈன்று காய்விட்டு
பழுத்துவிழ என
ஒரு சாக்கு கனவுகள் இருக்க

பாறை பெருவெளியில்
முள்சூழ முளைத்திருக்கும்
கிளையற்ற கள்ளிகளுடன் கள்ளியாய்
நிலையற்ற என் வாழ்வும்
காற்றும் முனைவதில்லை சீண்ட..

 பெரும் மூச்சுகளால் நா வரண்டு
தனித்தலைந்து
வாலிப கரையில்
வாடியிருக்கும் என் அருகே
இடி வெட்டி,மின் கொட்டி
வானக் கூரை வழியிறங்கி
அன்மித்து உடைந்து
கலக்கும் கடலை
மழை என்கின்றன
கல்லாய் இறுகி இருக்கும்
மண்ணாங் கட்டி மனசுகள்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.