ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

இடிவிழுந்த ஒரு காலை!













புள்ளினங்களின்
புனிதநீராட்டு விழாவுடன்
ஆரம்பித்து இன்முகத்தோடு
அழைத்துவந்து வாசலில் விட்ட
அதிகாலை
விடிகாலையாகி,
வெயில் காலையாகிய போதுதான்
உருக்குலைந்து
அடையாளம் காணமுடியாதபடி
இடர் காலையாய் பேர்
இடி விழுந்து நின்றது என் தெருவில்

வாலி என்ற பெருங்கவிஞன்
வலிகளுக்கிடையில் வந்துபோனான்
காதலில் வெற்றி கண்டால்
கழுத்தில் கயிறு தொங்கும்
காதலில் தோல்வி கண்டால்
கயிற்றில் கழுத்து தொங்கும்”

ஆனால் இங்கு
வாழ்க்கைக்குள் வந்து
வாரிசுகள் கண்டபின்பு
உள்ளிருக்கும் சந்தேக குப்பைகளை
வெளியே பெருக்க முடியாமல்
வாசலை விட்டு சில வீடுகளே
வாஸ்த்து சரியில்லை என்று
பூமிக்குள் புதைந்து விடுகின்றன

சாலையோரங்களை
அழகுபடுத்திய மரங்களை அணுகி
பூக்களை ஒவ்வொன்றாய்
வினயமாய் விசாரித்தேன்
காலைக்கு நேர்ந்த அபத்தம் பற்றி
அறியும் முனைப்பாய்

யாரிடமும் ஊகத்தை தவிர
உண்மை இருக்கவில்லை
கயிற்றுக்கும்,கழுத்துக்கும்
தெரிந்த ரகசியத்தை
படித்துப் பார்க்கும் பக்குவம்
முகமூடிகள் தரித்த மனித
முகங்களுக்கு
தெளிவில்லை என்ற போது
இடி இரண்டாவது முறையாய்
இறங்கியது அத்தெருவில்

இறகுகளை உதிர்த்துவிட்டு
உயிரை காவுகொடுத்திருக்கிறது
அந்த வெண்கொக்கு
அதன் குளத்தில் ஈரமில்லை
சேறும் இறுக வெறிச்சோடிற்று
மதம் வெடிக்க

பூமியின் மார்பு தவழ்ந்து
காற்றில் அசைகின்றன அதன் இறகுகள்
ஊரின் விழிகளெல்லாம்
கரைந்தபடி இறங்கி நடந்தன
இடிவிழுந்த காலையில்
நான் வாழை சுருட்டிக்கொண்டு
ஒரு பூனையாய் இருந்தேன்
எனது மலத்தை மறைத்தபடி
கண்களை மூடிவிட்டால்
உலகமே இருளென்ற
இறுமாப்பு இன்னும் இருக்கு....

அடுத்தமுறை இடிவந்தால்
அவனில் விழும் என்ற
ஒரு பாட்டியின் சாபம்
என்னை கடந்து செல்கிறது

(அன்மையில் தற்கொலை செய்துகொண்டதாக தவறிப்போன ஒரு தங்கைக்காய்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.